இயேசு கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன், தேவனுடைய கோபம் அவன் மேல் நிலை நிற்கும் என்று வசனம் திட்டமும் தெளிவுமாக கூறுகிறது. (1 யோ. 5: 12). ஆவியானவர் உங்களுக்கு தேவையா? கண்டிப்பாக நமக்கு தேவை. அப்படியானால் கிறிஸ்துவுக்குள் எனக்கு அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடு, பரிசுத்த ஆவியானவரே, நீர் வாரும் என்று நீங்கள் அழைப்பீர்களானால் அவர் நிச்சயமாக வரமாட்டார். மாறாக, இயேசுவே வாரும், உமதாவியை தாரும், என் உள்ளத்தில் தங்கும் , என்று நீங்கள் அழைப்பீர்களானால் இயேசு கிறிஸ்து தன் ஆவியோடு கூட தன் பிதாவின் ஆவியும் இணைந்தவராய் பரிசுத்த ஆவியானவராக வந்து நம் உள்ளத்தில் எப்பொழுதும் தங்குவார். பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் நிச்சயமாக வருவார். நம்மை வழி நடத்துவார், நம்மை பலப்படுத்துவார், சகல ஞானத்தினாலும் நம்மை நிரப்புவார், நம்மை தாங்குவார், கிறிஸ்துவுக்குள் நாம் நிலைத்திருக்க உதவி செய்வார், சகல வல்லமையினாலும் நிரப்புவார். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும் நிறைவேற்றவும் உதவி செய்வார்.
ஆகவே பரிசுத்த ஆவியானவரை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் ஆவி + பிதாவாகிய தேவனின் ஆவி = பரிசுத்த ஆவியானவர்
இருவர் ஆவியே என்று மார்டின் லுத்தர் தனது ஞானப்பாட்டில் குறிப்பிடுகிறார். (ஞானப்பாட்டு 83 : 6).
இதற்கு இன்னுமொரு ஆதாரமும் வேதத்தில் உள்ளது. யோவான் எழுதின 20ஆம் அதிகாரத்திலும், அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தின் 2ஆம் அதிகாரத்திலும் காணப்படுகிறது. யோவான் 20:22 ஆம் வசனத்தில் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்த பின்பு தன் சீஷர்கள் மத்தியில் நின்று அவர்களின் மீது ஊதி, பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த இடத்தில் பரிசுத்த ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் ஆவியையே குறிக்கும். ஏனென்றால் இதற்கு பிற்பாடு அவர் பரலோகத்திற்கு ஏறெடுக்கப்பட்ட பின்பு இயேசு கிறிஸ்துவினால் வாக்குபண்ணப்பட்டபடியே பெந்தேகோஸ்தே நாள் அன்று சீஷர்களும், இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தவர்களும் ஓரிடத்தில் கூடியிருக்கும்போது அவர்கள் மேல் பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் இறங்கினார். இப்படிப்பட்ட ஆவியை பெற்ற பின்பு அவர்கள் பெலனடைந்து உலகம் முழுவதும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். ஆகவே கிறிஸ்துவின் ஆவி எங்கேயோ அங்கே பிதாவாகிய தேவனுடைய ஆவி இரங்கும். இதனையே நாம் பரிசுத்த ஆவியானவர் (அல்லது) தேற்றரவாளன் என்று புரிந்து அறிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம், ஆகவே இது ஆவியானவரின் யுகம் என்று சொல்லி, இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் பிரசங்கிக்காவிட்டால், அவரை நாம் நம் உள்ளத்தில் ஏற்று கொள்ளாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்படமாட்டார். பரிசுத்த வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆவியானவரே, நீர் வாரும் என்று சொல்லப்படவில்லை. இயேசுவே வாரும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது (வெளி. 22:20).
சொல்லுவோம் இயேசு கிறிஸ்து நாமத்தை மட்டும்!
பெற்று கொள்வோம் பரிசுத்த ஆவியானவரை!!
சேருவோம் பிதாவாகிய தேவனை!!!
இங்கே நான் எழுதுவதன் நோக்கம்! இயேசு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் இரட்சகராக இறைவனாக ஏற்று கொண்ட பிறகே, கிறிஸ்துவின் வழியாக மட்டுமே, நாம் ஆவியானவரை பெற்று கொள்ளமுடியும் என்று நீங்கள் அறியவும், அறிந்து அவரை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. இயேசு கிறிஸ்து ஒருவரே பிதாவாகிய தேவனால் நமக்கு தரப்பட்ட இறைவனாக இருக்கிறார். அவர் ஒருவரையே இறைவனாக வழிப்படவும். அவருடைய நாமத்தை உயர்த்தவுமே, நம்மை பிதாவாகிய தேவன் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவை வணங்கும் போது நாம் பிதாவை வணங்குகிறோம் என்றும், இயேசு கிறிஸ்துவின் ஆவியை நம் உள்ளத்தில் உடையவர்களாக இருக்கும்போது மட்டுமே பரிசுத்த (அல்லது) தேவ ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படுகிறார் என்றும் உணர்ந்து, அறிந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுவதுமாக உங்கள் உள்ளங்களில் ஏற்று கொண்டு நித்திய வாழ்வை பெற்று கொள்ள பிதாவாகிய தேவன் அழைக்கிறார். இயேசு அல்லாமல் நமக்கு வேறே தெய்வம் இல்லை.
ஆகவே இயேசுவே இறைவன், அவரே இரட்சகர், அவரே மீட்பர், அவரே நம்மை பிதாவினிடத்தில் சேர்ப்பவர், நமக்கு பரிசுத்த ஆவியையும் கொடுப்பவரும் அவரே, வழியும் அவரே, சத்தியமும் அவரே, ஜீவனும், சர்வமும் அவரே, பிதாவாகிய தேவன் தாமே இயேசு கிறிஸ்துவை இதற்காகவே முத்திரித்திருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே உயர்த்துவோம், வணங்குவோம், வாழ்வடைவோம், பரலோக இராச்சியம் சேருவோம்.
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றும் யகோவா என்றும் ஆதியிலே தன்னை இஸ்ரவேல் ஜனத்துக்கு மோசேயின் வழியாக வெளிப்படுத்தியவர் ஆண்டவராகிய இயேசுவே. ஆகவே இயேசுவே யகோவா, யகோவாவே இயேசு கிறிஸ்து . (யோ. 1:1-3; யோ. 20:28; எபிரே, 1:2; 1 பேது. 1:20; 2 பேது. 1:1; 1 யோ. 1:1; வெளி, 22:13; மத். 22:45; மத். 28:9, 2 கொரிந்தியர் 4:5) எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பிதாவாகிய தேவன் உயர்த்தினதினாலே (பிலி.2:11). இயேசு (வெளி.3:12) என்ற அந்த நாமத்தை நாம் உச்சரிக்கவே பிதாவாகிய தேவன் விரும்புகின்றார், யகோவா என்ற நாமம் பிதாவுக்கு உரியது அல்ல, பிதாவாகிய தேவனின் நாமம் பரிசுத்த வேதாகமத்தில் எங்கும் கொடுக்கப்படவில்லை. பிதாவாகிய தேவனை நாம் நேரடியாக வணங்குவதற்கு (அல்லது) சேருவதற்கு வழி தரப்படவில்லை (யோவான் 14: 6). அப்படி வணங்கினாலும் அவர் அதை ஏற்று கொள்வதுமில்லை. அதை அவர் வெறுக்கிறார். ஏனென்றால் தன் குமாரனாம் இயேசுவையே நாம் தெய்வமாக வணங்க வேண்டும் என்ற கட்டளையை இயேசுவின் வழியாக நமக்கு கொடுத்தவர் பிதாவே (யாத். 20:2-6; யோவான் 3:16). இயேசுவை நாம் கர்த்தராக வழிபடுவது பிதாவாகிய தேவனின் சித்தத்தினால் அன்றி வேறு ஒரு காரணத்துக்காக இருக்கக்கூடாது என்று வேதம் திட்டமும் தெளிவுமாக கூறுகிறது (1 கொரி. 12:3). என் பிதா ஒருவனை இழுத்து கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான் என்று இயேசு தாமே யோவான் (6 :14) எழுதின சுவிசேஷத்தில் கூறியுள்ளார்.